அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கவர்னர் லிசா குக், அடமான மோசடி புகாரில் சிக்கியதால், அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை, அமெரிக்க நிதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே உயர் பதவியை வகித்த முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் லிசா குக் ஆவார். பெடரல் ஹவுசிங் ஃபைனான்ஸ் ஏஜென்சியின் இயக்குனர் பில் புல்டே, ஜார்ஜியா மற்றும் மிச்சிகனில் லிசா குக் அடமானம் வைத்த சொத்துக்களின் ஆவணங்கள் மோசடியானவை என்றும், 2021-ல் அவர் அளித்த விண்ணப்பங்களில் தவறான தகவல்களை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் தானாகவே ராஜினாமா செய்ய வேண்டும் என்று டிரம்ப் லிசா குக்கிற்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த லிசா குக், தனது பதவியில் தொடர்ந்து நீடித்து வந்தார்.
எனக்கு எதிரான மோசடி புகார்களுக்கு ஆதாரங்களை சேகரித்து வருகிறேன், விரைவில் அவற்றை வழங்குவேன் என்று அவர் இதற்கு முன் தெரிவித்திருந்த நிலையில், டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில், பெடரல் ரிசர்வ் வங்கி கவர்னர் லிசா குக் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.