அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், தேசிய காவல்படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்ட வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு வாஷிங்டன் மேயர் முரியல் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் காயங்களுடன் கைது செய்யப்பட்டார். கண்காணிப்பு வீடியோ ஆய்வில், சந்தேக நபர் வீரர்களை நெருங்கி துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது. சுடப்பட்ட வீரர்களில் ஒருவர் பதிலுக்குச் சண்டையிட்டார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் ஆத்திரம் தெரிவித்தார். புளோரிடாவில் இருந்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில், வீரர்களை சுட்ட "அந்த மிருகம் கடுமையான விலையை கொடுக்க நேரிடும்" என்று எச்சரித்தார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த, டிரம்ப் நிர்வாகம் உடனடியாக 500 கூடுதல் தேசிய காவல்படை வீரர்களை வாஷிங்டனுக்கு அனுப்ப உத்தரவிட்டது. அமெரிக்கா முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.