ஹரியானா மாநிலத்தில், உள்ளூர் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான ராம்கரன், நேற்று மாலை மருத்துவமனை அருகே துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். நகராட்சி தேர்தல் தொடர்பான நீண்டகால அரசியல் விரோதமே இந்த கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
குற்றவாளிகள் வாகனத்தில் வந்து ராம்கரனை சரமாரியாகச் சுட்டுவிட்டு தப்பி சென்றனர். குண்டு காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
ராம்கரனின் மருமகள் தற்போதைய கவுன்சிலராக உள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் நகராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவராக செயல்பட்டவர் என்றும், கடந்த உள்ளாட்சித் தேர்தல் முதல் இரு குடும்பங்களுக்கும் இடையே விரோதம் நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.
ராம்கரன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை தேடி தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கலவரங்களை தடுக்க நகரில் கூடுதல் பாதுகாப்புப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.