ஆறாவது அறிவுக்கு அப்பால் மனிதர்களுக்கு "தொலையுணர்வுத் தொடுகை" என்ற மறைக்கப்பட்ட ஏழாவது அறிவும் இருப்பதாக லண்டன் குயின் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த உணர்வு ஒரு பொருளை உடலால் தொடாமலேயே அதன் இருப்பை உணரும் திறன் ஆகும்.
மணற்பரப்பில் மறைந்திருக்கும் இரையை கண்டறியும் கடற்பறவைகளை போலவே, மனிதர்களும் மணலில் விரல்களை நகர்த்தும்போது உருவாகும் அழுத்த அலைகளை கண்டறிவதன் மூலம், புதைக்கப்பட்ட பொருளை உணர முடிகிறது.
இந்த ஆய்வில், மனிதர்கள் மணலுக்குள் 2.7 செ.மீ ஆழத்தில் உள்ள பொருட்களை 70.7% துல்லியத்துடன் கண்டறிய முடிந்தது. இது ரோபோக்களின் 40% துல்லியத்தை விட அதிகமாகும்.
தொல்லியல் ஆய்வு, அபாயங்களை கண்டறிதல் மற்றும் விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் இந்த ஏழாவது அறிவு உதவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு உளவியல், ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளுக்கு ஒரு புதிய மைல்கல் ஆகும்.