ஓடும் ரயிலின் ஸ்லீப்பர் கோச் பெட்டிக்குள் இருக்கைகளுக்கு நடுவே வாலிபர் ஒருவர் வாளியில் தண்ணீர் எடுத்து குளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, அந்த இளைஞர் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்த பிரமோத் ஸ்ரீவாஸ் என்ற அந்த இளைஞர், சமூக வலைதளங்களில் பிரபலம் அடைவதற்காகவே இந்த ரீல் வீடியோவை படமெடுத்து பதிவேற்றியது விசாரணையில் தெரியவந்தது.
குளிக்கும்போது சோப்பு, ஷாம்பு பயன்படுத்தும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றிருந்தன. இந்த அநாகரிகமான செயல் 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றதுடன், நெட்டிசன்களின் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வரம்புகளை மீறி செயல்பட்டதாக கூறி, ரயில்வே போலீசார் பிரமோத் ஸ்ரீவாஸை கைது செய்தனர். சமூக வலைதள புகழுக்காக வரம்புகளை மீறக்கூடாது என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.