லஷ்கர்-இ-தைபா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், வங்கதேசம் வழியாக இந்தியாவுக்கு எதிராக புதிய பயங்கரவாத தாக்குதலை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, தனது நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரை அவர் வங்கதேசத்துக்கு அனுப்பியுள்ளதாக, லஷ்கர் தளபதி ஒருவர் அண்மையில் நடந்த பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஹபீஸ் சயீத் அனுப்பியதாக கூறப்படும் இந்தக்கூட்டாளி, வங்கதேசத்தில் உள்ள இளைஞர்களை 'ஜிஹாத்' என்ற பெயரில் தூண்டிவிட்டு, அவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்டோபர் 30 அன்று பாகிஸ்தானின் கைர்பூர் டமேவாலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய லஷ்கர் தளபதி சைஃபுல்லா சைஃப், இந்தியாவுக்கு எதிராக 'ஜிஹாத்' செய்ய வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். மேலும், "எங்கள் ஆட்கள் கிழக்கு பாகிஸ்தானில் சுறுசுறுப்பாக உள்ளனர், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளனர்" என்று அவர் கூறினார்.
2008 மும்பை தாக்குதல் உள்ளிட்ட முக்கிய தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத், தற்போது பாகிஸ்தான் சிறையில் 78 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தாலும், சிறைக்குள் இருந்தே செயல்படுவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் ஆதரவுடனேயே இத்தகைய சதித் திட்டங்கள் தொடர்ந்து நடப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.