கிருஷ்ணகிரி நகர் மன்ற தலைவர் பரிதா நவாப் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று நகர்மன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 33 வார்டு உறுப்பினர்களில் 27 பேரின் ஆதரவு இந்த தீர்மானம் நிறைவேற தேவைப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 27 பேர் பங்கேற்றுள்ளனர்.
வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், அதிமுக உறுப்பினர் நாகஜோதி கடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே. அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்தில் நுழைய முயன்றனர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், ஆத்திரமடைந்த அதிமுகவினர் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நகராட்சி வளாகத்தில் கடும் பதற்றம் நிலவியது.