மராத்திய திரையுலகின் நடிகையான கிரிஜா ஓக், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன்னை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்படும் படங்களால் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கிரிஜா ஓக், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படம் உள்பட 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது:
"நான் டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறேன், சமூக வலைதளங்கள் எப்படி இயங்குகின்றன என்பது எனக்கு தெரியும். என்னை வைத்து மார்பிங் புகைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.
எனக்கு 12 வயதில் மகன் இருக்கிறான். அவன் தற்போது சமூக வலைதளத்தில் இல்லை. வருங்காலத்தில் பயன்படுத்துவான். இப்போது சுற்றும் புகைப்படங்கள் அப்போதும் இருக்கும். ஒரு அம்மாவின் போலியான புகைப்படங்களை அவனும் ஒருநாள் பார்ப்பான் என்பது எனக்கு தெரியும். இது போன்ற கேவலமான செயல்களை விளையாட்டிற்காக கூட செய்வது பயமுறுத்தும் வகையில் இருக்கிறது."
AI உதவியுடன் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒருமுறைக்கு இரண்டுமுறை சிந்திக்க வேண்டும் என்றும், அவர்களின் வேடிக்கையான செயலால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் கிரிஜா ஓக் கோரிக்கை விடுத்துள்ளார்.