பாலிவுட்டின் பிரபல நடிகரும், 'ஹீ-மேன்' என்று அழைக்கப்பட்டவருமான தர்மேந்திரா, தனது 89வது வயதில் இன்று காலமானார். டிசம்பர் 8 அன்று தனது 90வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தார்.
சில தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பிறகு வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் மரண செய்தியை சற்றுமுன் உறுதிப்படுத்தினர்.
முன்னதாக, தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியபோது, சிகிச்சைக்கு பதிலளித்து வரும் ஒருவரை பற்றி தவறான செய்தி பரப்புவது பொறுப்பற்றது என்று அவரது மனைவி ஹேமமாலினி கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால் இம்முறை அவரது குடும்பத்தினரே தர்மேந்திரா மறைவை உறுதி செய்துள்ளனர்.
1960ஆம் ஆண்டு 'தில் பி தேரா ஹம் பி தேரே' மூலம் அறிமுகமான தர்மேந்திரா, 'ஷோலே' உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 'ஷோலே அவுர் ஷப்னம்', 'பந்தினி' ஆகியவை அவரது குறிப்பிடத்தக்கப் படங்கள்.
அவர் மறைவுக்குப் பிறகு, ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அமிதாப் பச்சனின் பேரனான அகஸ்தியா நந்தா நடிக்கும் 'இக்கிஸ்' திரைப்படத்தில் அவர் இறுதியாக தோன்றவுள்ளார்.