சங்கராபரணம் படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து பிரபலமான துளசி, பின்னர் பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்தன் மூலம் கவனம் பெற்றார். அதன் பின்னர் அடுத்தடுத்து ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் அம்மா வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவின் குழந்தைத் தனமான அம்மா என்ற பெயரைப் பெற்றார்.
ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. சமீபகாலமாக அவரைப் படங்களில் பார்ப்பதே அரிதாக இருந்த நிலையில் தற்போது சினிமாவில் இருந்து தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்த அவரது சமூகவலைதளப் பதிவில் “இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி ஷீர்டி தரிசனத்துக்குப் பின் நான் மகிழ்ச்சியாக சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
அதன் பின்னர் என் வாழ்க்கை ஆன்மீகத்தில் மகிழ்ச்சியாக தொடரும். எனக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. சாய்ராம்” எனக் கூறியுள்ளார். திடீரென அவர் ஓய்வை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.