கரூர் சம்பவத்திற்கு பின் ஒரு மாத காலம் விஜய் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் தவெக நிர்வாகிகள் கலக்கமடைந்தனர்.கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து நேரில் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னரே விஜய் மீண்டும் அரசியல் வேலைகளில் இறங்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் தவெக சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது. அதில் கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் விஜய்க்கு கொடுக்கப்பட்டதோடு தவெகவின் முதல்வர் வேட்பாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கரூர் சம்பவத்திற்கு முன் ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பேசுவதை விஜய் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் கரூர் சம்பவத்தால் அது நின்று போனது. தற்போது மீண்டும் அதை துவங்க விஜய் திட்டமிட்டிருக்கிறார். வருகிற டிசம்பர் 4ம் தேதி சேலத்தில் மக்களை சந்திக்க தவெக சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே, தேதியை மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
இந்நிலையில் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஒரு மீட்டிங் நடத்தவிருக்கிறார் விஜய். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்திற்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23ம் தேதி) வரும் விஜய் அங்கு தொண்டரணி மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அவர்களோடு ஆலோசனை நடத்த திட்டமிட்டிருருக்கிறார் என தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது. கரூர் சம்பவத்திற்கு பின் முதல்முறையாக வெளியூர் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.