செயற்கைக்கோள் படங்களை முதலில் பார்க்கும் போது பச்சை நிறப் பிளவுகளுக்கு மத்தியில், சாம்பல் நிறக் குமிழ்கள் இருப்பது போலத் தோன்றின. ஆனால், நெருக்கமாக அப்படத்தை ஆய்வு செய்தால், அக்குமிழ்கள் மரங்களுக்கிடையில் அலைந்து திரியும் யானைகள் எனத் தெரிய வந்தன.
விஞ்ஞானிகள் இந்த படங்களை ஆப்பிரிக்க யானைகளைக் கணக்கிட பயன்படுத்துகின்றனர்.
புவியின் மேற்பரப்பிலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் தன் சுற்று வட்டப்பாதையில் புவியைக் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களிலிருந்து இந்தப் படங்கள் வருகின்றன.
இந்த தொழில்நுட்பத்தால், மேக மூட்டம் இல்லாத ஒரு நாளில், 5,000 சதுர கி.மீ வரை யானைகளின் வாழ்விடத்தை கணக்கிடுவதற்கான சாத்தியமிருக்கிறது.
யானை எண்ணும் பணிகள் இயந்திர கற்றல் (Machine Learning) மூலம் செய்யப்படுகிறது. பலவிதமான பின்னணிகளில் யானைகளை அடையாளம் காண ஓர் அல்காரிதத்துக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.
"இது ஒரு யானை, இது யானை அல்ல என நாங்கள் சில எடுத்துக்காட்டுகளை முன்வைத்துக் கூறுகிறோம்" என பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஓல்கா இசுபோவா கூறினார்.
"இப்படிச் செய்வதன் மூலம், நம் சதாரணக் கண்களால் பார்க்க முடியாத சின்னச் சின்ன விவரங்களைக் கூட அடையாளம் காண இயந்திரத்துக்கு பயிற்சியளிக்க முடியும்" என்கிறார் ஓல்கா.
விஞ்ஞானிகள் முதலில் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் அட்டோ தேசிய யானைகள் பூங்காவைப் பார்த்தார்கள்.
"இந்த யானைகள் பூங்காவில், யானைகள் அதிகளவில் வாழ்கின்றன" என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பாதுகாப்பு விஞ்ஞானி முனைவர் இஸ்லா டுபொர்கே கூறினார்.
"இங்கு மரம் அடர்ந்த பகுதிகளும், சவானா எனப்படும் மரம் அருகிய புல்வெளிகளும் உள்ளன. எனவே எங்கள் அணுகுமுறையை சோதிக்க இது ஒரு நல்ல இடம். இந்த முயற்சிக்கு இது ஒரு நல்ல சான்றாக அமைந்தால், இதை செயல்படுத்தத் தயாராகிவிடலாம்" என்கிறார் இஸ்லா.
"ஏற்கனவே பாதுகாப்பு அமைப்புகள் விமானங்களைப் பயன்படுத்தி கணக்கெடுப்பதற்கு பதிலாக, இந்த முறையைப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளன" எனவும் கூறினார்.
வணிக செயற்கைக்கோள்கள் எடுக்கும் படங்களைப் பெற, இயற்கை மற்றும் வன விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் பணம் செலுத்த வேண்டும்.
பல நாடுகளின் எல்லைகளை உள்ளடக்கிய யானைகளின் வாழ்விடங்களில் விமானங்களைப் பயன்படுத்தி கணக்கெடுப்பதற்கு அனுமதி பெறுவது மிகவும் சிக்கலானது. அப்படிப்பட்ட பகுதிகளில் அருகி வரும் யானைகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்கும் பணியை இது கணிசமாக மேம்படுத்தும்.
அதிநவீனத் தொழில்நுட்பம்
விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் பணிகளுக்கும் இதைப் பயன்படுத்தப்படலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
"இந்தப் படங்களை நீங்கள் விண்வெளியில் இருந்து எடுக்க முடியும் என்பதால், உங்களுக்கு யானைகள் நடமாடும் வனப்பகுதியில் ஆட்கள் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. குறிப்பாக கொரோனா வைரஸ் நெருக்கடி நிலவும் இந்த காலத்தில் இது மிகவும் உவியாக இருக்கும்" என்கிறார் முனைவர் இஸ்லா.
"விலங்கியலைப் பொறுத்தவரை, தொழில்நுட்பம் மிகவும் மெதுவாக நகரும். எனவே விலங்குகளின் பாதுகாப்புக்கு அதிநவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது மிகவும் நன்றாக இருக்கிறது" என்கிறார் இஸ்லா.