Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிலா சென்று மண் எடுத்துத் திரும்பியது சீன விண்கலம்

நிலா சென்று மண் எடுத்துத் திரும்பியது சீன விண்கலம்
, வியாழன், 17 டிசம்பர் 2020 (10:58 IST)
"தஞ்சாவூரு மண்ணு எடுத்து, தாமிரபரணி தண்ணிய விட்டு சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை... " என்று ஒரு பழைய தமிழ்ப் பாட்டு கேட்டிருக்கிறீர்களா?

இப்போது இந்த பாட்டை சீனர்களிடம் கொடுத்தால், "நிலாவிலே மண்ணு எடுத்து..." என்று வரியை மாற்றிப் போட்டு மகிழ்ச்சியாகப் பாடுவார்கள்.
 
ஆம். சீனாவின் சாங்கே-5 விண்கலம் நிலாவில் இருந்து கல், மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிவிட்டது.
 
இந்த விண்கலம், நெய் மங்கோல் எனப்படும் சீனாவின் தன்னாட்சிப் பகுதியில், உள்ளூர் நேரப்படி, வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் தரையிறங்கியது. இந்த இடத்தைதான் சீனா, தன் விண்வெளி வீரர்களை தரையிறக்கவும் பயன்படுத்துகிறது.
 
விண்கலம் வந்தடைந்த இடத்தை, அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தி, விண்கலத்தின் வெப்பத்தை வைத்து, ஹெலிகாப்டரில் சென்று கண்டுபிடித்தார்கள் மீட்புக்  குழுவினர்.
 
அமெரிக்காவின் அப்பல்லோ மற்றும் சோவியத் ரஷ்யாவின் லூனா திட்டங்கள் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன், நிலவில் இருந்து மாதிரிகள் பூமிக்கு கொண்டு  வரப்பட்டன. அதற்குப் பின் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சீனா, நிலவில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வந்திருக்கிறது.
 
இந்த மாதிரிகள், நிலவின் மண்ணியல் மற்றும் ஆரம்ப கால வரலாறு குறித்து அறிந்துகொள்ள உதவக்கூடும்.
 
கடந்த நவம்பர் மாதம் சங்கே - 5 விண்கலம் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் பல பகுதிகள் இருந்தன.
 
நிலவை சுற்றிவரும் சுற்றுவட்டக் கலனில் இருந்து ஒரு பகுதி நிலவில் தரையிறங்கியது.
 
பிறகு, நிலவின் மேற்பரப்பில் துளையிடும், அள்ளும் கருவிகள் உதவியோடு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. எவ்வளவு மாதிரிகளை அது சேகரித்தது என தெளிவாகத்  தெரியவில்லை. ஆனால் இது 2 முதல் 4 கிலோ வரையில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

webdunia
இந்த கலன் மொத்தம் இரண்டு நாட்கள் மட்டுமே நிலவில் செலவழித்தது.
 
பிறகு அந்த மாதிரிகளை எடுத்துக்கொண்டு ஒரு வாகனம் சுற்றுவட்டக் கலனுக்குத் திரும்பியது. அங்கிருந்து புவிக்குத் திரும்பும் ஒரு சிறுகலன் மூலம் இந்த  மாதிரிகள் புவிக்கு அனுப்பப்பட்டன.
 
அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகளும் இதுவரை மொத்தம் சுமார் 400 கிலோ அளவுக்கு நிலவின் மாதிரிகளைச் சேகரித்துள்ளன.
 
இந்த மாதிரிகள் அனைத்துமே மிகவும் பழமையானவை. அதாவது சுமாராக 3 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை. ஆனால் சாங்கே - 5 கொண்டு வந்திருக்கும் நிலவின் பாறை மற்றும் மண் மாதிரிகள் மாறுபட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
சாங்கே-5, நிலவின் வடமேற்குப் பகுதியில், மூன்ஸ் ரூம்கெர் (Mons Rumker) என்கிற எரிமலைப் பகுதியைத் தான் குறி வைத்தது.
 
இந்த பகுதியைச் சேர்ந்த நிலவின் மாதிரிகள் 1.2 அல்லது 1.3 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதோடு இந்த மாதிரிகள்,  நிலவு எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான கூடுதல் விவரங்களை வழங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
சீனாவின் சாங்கே - 5 வெற்றி, விண்வெளித் துறையில் அதிகரித்து வரும் சீனாவின் திறனை பறைசாற்றுவதாகப் பார்க்கப்படுகிறது.
 
2024-ம் ஆண்டில், அமெரிக்காவும் நிலவுக்குத் தன் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு முன் நிலவில், இயந்திரங்களைக் களமிறக்க இருக்கிறது அமெரிக்கா. ஆக, மீண்டும் நிலவு ஒரு போட்டிக் களமாக மாறியிருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து நடக்கும் ரெய்டு; கொத்தாய் சிக்கும் தொழிலதிபர்கள்! – கலக்கத்தில் முக்கிய புள்ளிகள்!