Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனி - வியாழன் சேர்க்கை டிசம்பர் 21: 400 ஆண்டுகளுக்கு பின் சூரிய மண்டல விண்வெளி அதிசயம்

சனி - வியாழன் சேர்க்கை டிசம்பர் 21: 400 ஆண்டுகளுக்கு பின் சூரிய மண்டல விண்வெளி அதிசயம்
, வியாழன், 17 டிசம்பர் 2020 (14:30 IST)
நம் பார்வைக் கோணத்தில் சனி - வியாழன் கோள்கள் இரண்டும் மிகவும் அருகே நெருங்கி வரும் அரிய நிகழ்வு டிசம்பர் 21-ம் தேதி நிகழவுள்ளது. இப்படி நெருங்குவதால் புவிக்கு ஏதாவது நேருமா? இதை வெறும் கண்ணால் பார்க்கலாமா? அடுத்தது எப்போது இப்படித் தெரியும்? என்று பல கேள்விகளுக்கு விடை தருகிறார் அறிவியலாளர் சௌந்தரராஜ பெருமாள்.

தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் செயல் இயக்குநராக உள்ள இவர் சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் நிகழப் போகும் இந்த அதிசயம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.

அவரது பேட்டியில் இருந்து:

இந்த மாதம் டிசம்பர் 21ஆம் தேதி வானில் ஓர் அதிசய நிகழ்வு நடைபெற இருக்கிறது.

நம்முடைய பார்வைப் புலம் (Line of sight) இருக்கும் திசையில், இரண்டு மிகப்பெரிய வாயுக் கோள்களான வியாழன் (Jupiter) மற்றும் சனி (Saturn) ஆகியவற்றின் பெரும் ஒருங்கமைவு (Great Conjunction) அப்போது நடைபெறும்.

சாதாரணமாக இந்த இரண்டு கோள்களுக்கு இடையேயான ஒருங்கமைவு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் என்றாலும், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், சரியாக சொல்ல வேண்டுமானால் 397 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இரு கோள்களும் இவ்வளவு நெருக்கத்தில் காட்சியளித்துள்ளன.

அப்போதுதான் இந்த இரண்டு கோள்களின் கோணத் தொலைவு (Angular Distance) புள்ளி ஒரு டிகிரியாக (0.1 Degree) இருந்துள்ளது. இதே அளவு தொலைவிலான பார்வைக் கோண நெருக்கம், வரும் 21 ஆம் தேதி அமையவுள்ளது.

20 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் ஒருங்கமைவில் இரு கோள்களுக்கு இடையில் தோன்றும் கோணத் தொலைவை ஒப்பிடும்போது இப்போது தோன்றும் ஒருங்கமைவில், இடைவெளி வெறும் பத்தில் ஒரு மடங்குக்கும் குறைவுதான் என்கிறார் சௌந்தரராஜ பெருமாள்.

மீண்டும் எப்போது?

இது போன்ற நிகழ்வு மீண்டும் எப்போது நடக்கும் என்பது குறித்தும் அவர் பேசினார்.
"இதே போன்ற ஓர் அதிசய நிகழ்வு அடுத்ததாக 2080 ஆம் ஆண்டில் மீண்டும் நடைபெறும் என கணக்கிடப்பட்டுள்ளது" என்று கூறிய அவர்,

21 ஆம் தேதிக்கும் முன்பாகவே இன்றும் கூட சூரியன் மறைந்த சில நிமிடங்களில் வானில் மேற்கு திசையில், இந்த இரண்டு கோள்களையும் பிரகாசமான புள்ளியாக காணமுடியும். ஆனால் அந்த இரண்டு கோள்களின் கோணத் தொலைவு படிப்படியாக குறைந்து டிசம்பர் 21 ஆம் தேதியன்று புள்ளி ஒரு டிகிரியாக மாறும். அன்று இந்த கோள்கள் ஒரே புள்ளியில் சேர்ந்து காட்சியளிக்கும் என்றார்.

ஆனால் உண்மையில் அந்த இரண்டு கோள்களும் அருகில் இருக்காது. அவற்றின் தூரம் மிக அதிக அளவில் இருந்தாலும் அவை நேர்கோட்டில் இணைவதால் அவ்வாறு தோன்றும்.

நிஜத்தில் வியாழன் கோளானது பூமியிலுருந்து சராசரியாக 88.6 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும், சனி கோளானது பூமியிலுருந்து சராசரியாக 162 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. எனவே இவற்றிற்கு இடைப்பட்ட உண்மையான தொலைவு 74 கோடி கிலோ மீட்டரைவிட அதிகம்.

பூமியின் மீது தாக்கம் எப்படி இருக்கும்?

இவ்வளவு தொலைவில் இவை இருப்பதால், இந்த நிகழ்வு நடைபெறும் சமயத்தில் இந்த கோள்கள் நம் பூமி மீது ஏற்படுத்தும் தாக்கம் மிக மிக குறைவாகவே இருக்கும்.

நம் பூமி மீது அதிகபட்சமாக ஆற்றலை செலுத்தி நம் பூமியில் சற்று மாற்றத்தை உண்டாக்கக்கூடிய விண்பொருள் என்றால் அது நிலவு மட்டுமே. கடல் ஓதங்களை உண்டாக்க நிலவின் ஈர்ப்பு விசையால் முடிகிறது. ஆனால் இந்த இரண்டு கோள்களின் ஈர்ப்பு விசை புவியின் மீது செயல்படும் அளவு நிலவின் ஈர்ப்புவிசையால் ஏற்படும் தாக்கத்தைவிட 10 லட்சம் மடங்கு குறைவாக இருக்கும் என்பதால், அது எந்த ஒரு தாக்கத்தையும் புவியின் மீது செலுத்த முடியாது.

வரும் 21 ஆம் தேதி நடைபெறும் இந்த இரண்டு கோள்களுக்கு இடையிலான கோண ஒருங்கமைவு போல மற்ற கோள்களுக்கு இடையேயும் அவ்வப்போது நடைபெறும். கடந்த மார்ச் மாதத்தில் கூட செவ்வாய் (Mars) மற்றும் வியாழன் (Jupiter) கோள்களுக்கு இடையேயும், செவ்வாய் (Mars) மற்றும் சனி (Saturn) ஆகிய கோள்களுக்கு இடையேயும் ஒரே மாதத்தில் ஒருங்கமைவு நடைபெற்றது.

இவற்றில் சில ஆண்டுதோறும் கூட நடைபெறும். ஆனால் வியாழன் (Jupiter) மற்றும் சனி (Saturn) ஆகிய இந்த இரண்டு கோள்களின் ஒருங்கமைவு மிக அரிய நிகழ்வு என்பதால் இதை காண உலகெங்கிலும் ஏராளமான மக்கள் காத்து கிடக்கின்றனர் என்கிறார் சௌந்தரராஜ பெருமாள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாய் கூசாமல் வசனம் பேசிய அமைச்சர்கள் எங்கே? விளாசிய டிடிவி!!