Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈலோன் மஸ்க்கின் கனவுத் திட்டம் ஸ்டார்ஷிப்: மனிதர்களின் விண்வெளி பயணத்தை சாத்தியமாக்குமா?

ஈலோன் மஸ்க்கின் கனவுத் திட்டம் ஸ்டார்ஷிப்: மனிதர்களின் விண்வெளி பயணத்தை சாத்தியமாக்குமா?
, செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:50 IST)
அமெரிக்க தொழில்நுட்ப தொழில்முனைவோரும், சமீபத்தில் உலகின் மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்தவருமான ஈலோன் மஸ்க், ஸ்டார்ஷிப் என்கிற புதிய  விண்வெளி வாகனத்தின் மாதிரியை (புரோடோடைப்) விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார்.

இந்த ஸ்டார்ஷிப் திட்டம் விண்வெளிப் பயணத்தில் மிகப் பெரிய தாக்கத்தை செலுத்தக்கூடிய ஒன்றாக அமையலாம். இது முழுக்க முழுக்க மீண்டும்  பயன்படுத்தப்படக் கூடிய போக்குவரத்து சாதனம். இந்த ஸ்டார்ஷிப் வாகனத்தில் 100 பேர் வரை செவ்வாய் கிரகத்துக்குச் செல்லலாம்.
 
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவது குறித்து ஈலோன் மஸ்க் அவ்வப்போது பேசி வருகிறார். செவ்வாய் கிரகத்தில் குடியேற அதிக அளவில் மக்கள்  தேவை எனவும் மஸ்க் நம்புகிறார். அப்போதுதான் செவ்வாய் கிரகத்தில் தங்களுக்குதேவையானவைகளை தாங்களே மனிதர்கள் பூர்த்தி செய்து கொள்ள முடியும்  என்று அவர் கருதுகிறார்.
 
இந்த கனவுக்கு ஒரு பிரம்மாண்டமான வாகனம் தேவைப்படுகிறது. அதற்குத் தான் ஸ்டார்ஷிப் என்கிற ஏவூர்தி (ராக்கெட்) மற்றும் விண்கலம் கலந்த ஒரு வாகனத்தை உருவாக்கி வருகிறார். இதில் ஒரே நேரத்தில் 100 பேர் செவ்வாய் கிரகத்துக்கு பயணப்படலாம்.
 
இந்த வாகனத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். அதாவது மற்ற ஏவூர்திகளை போல ஒருமுறை பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், ஒரே ஸ்டார்ஷிப்பை  வைத்து பல முறை செவ்வாய் கிரகத்துக்குப் போகலாம். இதனால் செலவு கணிசமாகக் குறையும்.
 
ஸ்டார்ஷிப் ஒரு பார்வை
 
ஸ்டார்ஷிப் வாகனத்தில் இருக்கும் ஏவூர்தியை சூப்பர் ஹெவி ராக்கெட் என்கிறார்கள். விண்கலப் பகுதியைத் தான் ஸ்டார்ஷிப் என்கிறார்கள். இரண்டும் சேர்ந்து 120  மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும்.
 
முதலில் விண்கலத்தைப் பார்ப்போம். இந்த துருவுறா எஃகு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) வாகனம் முன்னொரு காலத்தில் அறிவியல் கற்பனைக் கதைகளில் காட்டும் ஏவூர்திகளை போன்ற மூக்கையும், ஃபின்ஸ் எனப்படும் இறக்கைகளையும் கொண்டிருக்கிறது. இந்த விண்கலப் பகுதி மட்டும் 50 மீட்டர் நீளம் கொண்டது. இதன்  மேற்பகுதியில் டன் கணக்கில் சரக்குகளையோ அல்லது மக்களையோ விண்வெளிக்கு கொண்டு செல்ல முடியும்.
 
இந்த விண்கலத்தின் நடுப்பகுதியில் எரிபொருள் டேங்க் இருக்கிறது. இதில் திரவ மீத்தேன் (CH4) மற்றும் திரவ ஆக்ஸிஜன் (O2) நிரப்பப்படுகிறது. இந்த எரிபொருளை ஆறு சக்தி வாய்ந்த ராப்டர் இன்ஜின்களுக்கு சப்ளை செய்கிறது.
 
ராப்டர் இன்ஜின்களையும், ஈலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இந்த ராப்டர் இன்ஜின்கள் தேவையற்ற உந்து ஆற்றலைக்  குறைக்கிறது
 
மீத்தேன் எரிபொருளாகவும், ஆக்ஸிஜென் அதை எரிக்கும் பொருளாகவும் இருக்கிறது. இந்த இணையை மெதலாக்ஸ் (Methalox) என்கிறார்கள்.
 
மீத்தேன் அதிக அளவிலான உந்து ஆற்றலை வெளிப்படுத்தும். சபாட்டியர் விளைவு (Sabatier reaction) மூலம், செவ்வாய் கிரகத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைட் மற்றும் நீரைப் பயன்படுத்தி மீத்தேன் மற்றும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து கொள்ளலாம் என்கிறார் ஈலோன் மஸ்க்.
 
எனவே செவ்வாய் கிரகத்துக்குச் சென்று வரும் செலவு குறையும், நமக்குத் தேவையான எரிபொருளையும் செவ்வாய் கோளிலிருந்தே எடுத்துக் கொள்ளலாம்.
 
இப்போது ஏவூர்திக்கு (ராக்கெட்) வருவோம். ஏவூர்தியின் நீளம் 70 மீட்டர். மிகுந்த எடை கொண்ட இந்த ஏவூர்தியில் 3,400 டன் கிரையோஜெனிக் மெத்தலாக்ஸ் எரிபொருள் நிரப்பப்படும். 28 ராப்டர் இன்ஜின்களால் (இந்த கணக்கு மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது) உந்தித் தள்ளப்படும். இந்த ஏவூர்தியால் குறைந்தபட்சம் 100  டன் எடையை எடுத்துச் செல்ல முடியும். தாழ் புவி வட்டப்பாதை என்றால் சுமாராக 150 டன் எடையைச் சுமந்து செல்லும்.
 
எனவே, இதற்கு முன் 1960 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் அப்பல்லோ நிலவு திட்டத்துக்குப் பயன்படுத்திய சாட்டன் V லாஞ்சரை விட, இது பல மடங்கு சக்திவாய்ந்த வாகனமாக இருக்கிறது.
 
இது எப்படி விண்வெளிக்குச் செல்லும்?
 
ஏவுதளத்திலிருந்து புறப்படும் ஸ்டார்ஷிப் தனக்கான சுற்று வட்டப் பாதையை நோக்கிச் செல்லும். ஸ்டார்ஷிப்பின் மேற்பகுதி தனியாகப் பிரிந்த பின், ஏவூர்தி (சூப்பர் ஹெவி ராக்கெட்) வானத்திலிருந்து பூமியை நோக்கிக் கீழே விழத் தொடங்கும்.
 
அப்படி புவியை நோக்கி வரும் போது ஏவூர்தி அதன் பக்கவாட்டிலிருந்து கிரிட் ஃபின்ஸ் எனப்படும் இரும்பு பாகத்தை வெளிப்படுத்தும். இந்த கிரிட் ஃபின்ஸ்கள்,  ஏவூர்தி பத்திரமாக ஏவுதளத்தை வந்தடைய உதவும். எனவே இந்த ஏவூர்தியை அடுத்தடுத்த பயணங்களுக்கான மீண்டும் பயன்படுத்தலாம்.
 
இதில் வியப்பளிக்கும் விடயம் என்னவென்றால், ஏவுதளத்தை வந்தடையும் ஏவூர்தியை வழக்கமான முறைகளில் அல்லாமல், ஒரு இயந்திரக் கையை வைத்து, தரையிறக்க திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக ஈலான் மஸ்க் சமீபத்தில் ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்த ஏவுதளக் கட்டடம் தான் ஏவூர்தி மற்றும் விண்கலம் என அனைத்துக்குமான கட்டுப்பாட்டு வசதிகளை பொறியியலாளர்கள் மற்றும் மற்ற குழு உறுப்பினர்களுக்கு வழங்குகிறது. ஏவூர்தியை இயந்திரக் கை கொண்டு பிடிக்கும் விஷயம் எப்படி செயல்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
மீண்டும் ஸ்டார்ஷிப் விண்கலத்துக்கு வருவோம். ஏவூர்தி புவியை வந்தடையும் நேரத்தில், ஸ்டார்ஷிப் தன்னுடைய சுற்று வட்டப் பாதையில் நுழைந்திருக்கும்.  இப்போது இந்த சுற்று வட்டப் பாதையிலேயே ஸ்டார்ஷிப்பில் எரிபொருளை நிரப்புவதும் சாத்தியமே.
 
அதாவது, புவியில் இருந்து எரிபொருள் டேங்கரை சுற்று வட்டப் பாதைக்கு அனுப்பி, ஸ்டார்ஷிப் விண்கலத்தில் எரிபொருளை நிரப்பினால், ஸ்டார்ஷிப் செவ்வாய்  கிரகத்தைச் சென்றடையும் என 2017-ம் ஆண்டிலேயே கூறியிருந்தார் ஈலான் மஸ்க்.
 
ஸ்டார்ஷிப் எதற்கு பயன்படுத்தப்படும்?

webdunia
சுருங்க சொல்வதென்றால் இந்த ஸ்டார்ஷிப் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று வர பயன்படுத்தப்படும். புவியிலிருந்து செவ்வாய்க்குச் செல்ல அல்லது வர சுமாராக  ஒன்பது மாதங்கள் ஆகும். இந்த ஸ்டார்ஷிப் விண்கலத்தில் சுமார் 40 சிற்றறைகளை (கேபின்கள்) நிறுவும் யோசனையில் இருக்கிறார் ஈலான் மஸ்க்.
 
பொதுவாக ஒரு சிற்றறையில் அதிகபட்சமாக ஐந்து அல்லது ஆறு பேர் வரை பயணிக்கலாம். ஆனால் தன்னைப் பொறுத்தவரை, ஒரு சிற்றறைக்கு இரண்டு அல்லது  மூன்று பேர் என மொத்தமாக 100 பேர் வரை பயணிக்கலாம் என்கிறார் மஸ்க்.
 
இந்த சிற்றறைகள் போக, ஸ்டார்ஷிப்பில் பொதுவான இடங்கள், சேமிப்புக் கிடங்குகள், சோலார் ஸ்டார்ம் எனப்படும் சூரியன் ஆபத்தான கதிர்களை வெளியிடும்  போது மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இடங்கள் என பல வசதிகள் இருக்கின்றன.
 
இந்த ஸ்டார்ஷிப் நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்திலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கலாம். நிலவில் நீண்ட காலம் மனிதர்கள் இருக்கவும் ஸ்டார்ஷிப் திட்டத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ஷிப்பின் வடிவமைப்பை மேம்படுத்தி நிலவில் தரையிறங்க, 2020-ம் ஆண்டு, நாசா 135 மில்லியன் டாலரை ஸ்பேஸ் எக்ஸ்  நிறுவனத்துக்கு வழங்கியது.
 
ஆர்டெமிஸ் திட்டத்துக்காக உருவாக்கப்படும் ஸ்டார்ஷிப்பில் வெப்பத்தைத் தாங்கும் கேடயங்களோ அல்லது, புவிக்குத் திரும்பும் போது தேவையான இறக்கைகளோ  இருக்காது. அதற்கு பதிலாக, ஸ்டார்ஷிப் ஹியூமன் லேண்டிங் சிஸ்டம் இருக்கும். இதை வைத்துக் கொண்டு நிலவின் சுற்று வட்டப் பாதைக்கும், நிலவின்  பரப்புக்கும் பலமுறை பயணம் மேற்கொள்ளலாம்.
 
அவ்வளவு ஏன், ஸ்டார்ஷிப்பை வைத்துக் கொண்டு வியாழன் கிரகத்துக்கே செல்லாம். ஆனால் அது நீண்ட கால திட்டம் என்கிறார் ஈலான் மஸ்க்.
 
ஸ்டார்ஷிப் எப்படி தரையிறங்கும்?
 
பொதுவாக விண்கலத்தை புவியில் தரையிறக்க, பாராசூட்டைப் பயன்படுத்துவார்கள் அல்லது ஓடுதளத்தில் தரையிறக்குவார்கள்.
 
ஆனால் ஸ்டார்ஷிப் விண்கலம், புவியின் வளிமண்டலத்தை வந்தடையும் போது 60 டிகிரி கோணத்தில் நுழையும். கிடைமட்டமாக தரை நோக்கி வரும். விண்கலம்  மெதுவாக தரையிரங்கும் இந்த ஒட்டு மொத்த செயல்பாடும் வளிமண்டலத்தை நம்பித்தான் நடக்கும். இதில் மிகப் பெரிய சவால் என்னவென்றால், இந்த  ஒட்டுமொத்த செயல்பாட்டின் போதும் ஸ்டார்ஷிப் மிகவும் நிலையற்ற தன்மையில் இருக்கும்.
 
எனவே இந்த செயல்பாட்டை நிலைப்படுத்த, ஸ்டார்ஷிப்பின் முன் பக்கம் மற்றும் பின் பக்கத்தில் இருக்கும் நான்கு சிறிய இறக்கைகள் பயன்படுத்தப்படும். இது  வானத்திலிருந்து குதிக்கும் டைவர்கள் தங்களின் கை மற்றும் கால்களை பயன்படுத்தி தங்களை நிலைப்படுத்திக் கொள்வது போல எனலாம்.
 
ஸ்டார்ஷிப் வானத்திலிருந்து புவியை நோக்கி வரும் போது, அதன் இன்ஜின்களை இயக்கி, ஸ்டார்ஷிப்பை செங்குத்தாக நிறுத்துமளவிற்கு மெதுவாகப் பறக்க  வேண்டும். அதாவது விழும் வேகம் குறைக்கப்பட வேண்டும். அதன் பின் ராப்டர்கள் ரெட்ரோ ராக்கெட்களாக பயன்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக ஸ்டார்ஷிப்  தரையிறக்கப்படும்.
 
இந்த தரையிறங்கும் முறையை, நம் சூரிய குடும்பத்தில் எந்த கோளில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று உறுதிபட கூறுகிறார் ஈலான் மஸ்க். இதில்  மஸ்கின் விருப்பமான செவ்வாய் கோளும் அடக்கம்.
 
ஸ்டார்ஷிப் எப்போது பறக்கும்?
 
கடந்த சில ஆண்டுகளில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தன்னுடைய பல மாதிரி (புரோட்டோடைப்) ஸ்டார்ஷிப்களை, அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தில்  இருக்கும் பொகா சிகாவில் சோதனை செய்துள்ளது.
 
கடந்த 2020 டிசம்பரில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் 8-ஐ (கூரிய முன் பகுதி மற்றும் ஃப்ளாப்ஸ் எனப்படும் சிறிய இறக்கைகளைக் கொண்ட முதல் ரக  ஸ்டார்ஷிப் இது) சோதனை செய்தது.
 
12.5 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து, ஸ்டார்ஷிப் 8 மேலே கூறியது முறைப்படி தரையிறக்கப்பட்டது. இந்த சோதனை, விண்வெளியிலிருந்து புவிக்கு  தரையிறங்குவது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு பல தரவுகளைக் கொடுத்தது.
 
ஆனால், ஸ்டார்ஷிப் 8 வேகமாக தரையிறங்கியதால் வெடித்துச் சிதறிவிட்டது. ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தன்னுடைய ஸ்டார்ஷிப் 9-ஐ ஏவுதளத்தில்  நிறுத்திவிட்டது. இந்த முறை கச்சிதமாக தரையிறக்க இலக்கு வைத்து பணியாற்றி வருகிறார்கள்.
 
2024-ம் ஆண்டு மனிதர்களின்றி, ஸ்டார்ஷிப்பை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப இலக்கு வைத்திருப்பதாக கடந்த அக்டோபர் 2020-ல் கூறினார் ஈலான் மஸ்க்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு... திமுகவினர் அதிர்ச்சி!!