2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கவுள்ள 1355 வீரர்களின் நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ள இந்த ஏலத்திற்காக, அதிகபட்ச அடிப்படை விலையான ரூ. 2 கோடி பிரிவில் மொத்தம் 45 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த பிரிவில், இந்திய வீரர்களான வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னோய் உட்பட ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன், லியாம் லிவிங்ஸ்டோன், மதீஷா பதிரனா, மற்றும் வனிந்து ஹசரங்கா போன்ற முன்னணி வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வெளிநாட்டு இடங்கள் காலியாக உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR- ரூ. 64.3 கோடி) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK- ரூ. 43.4 கோடி) போன்ற அணிகள், நட்சத்திர வீரரான கேமரூன் கிரீனை வாங்க தீவிரமாக ஏலம் கேட்க வாய்ப்புள்ளது. மேலும், சிஎஸ்கே-வால் விடுவிக்கப்பட்ட மதீஷா பதிரனா மற்றும் ஆர்சிபி-யால் விடுவிக்கப்பட்ட லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் ரூ. 2 கோடி பிரிவில் உள்ளனர். வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் தனது அடிப்படை விலையை ரூ. 1 கோடியாக நிர்ணயித்துள்ளார்.
10 அணிகளும் செலவழிக்க மொத்தமாக ரூ. 237.55 கோடி கையிருப்பில் உள்ள நிலையில், இந்த ஏலத்தில் வீரர்களை வாங்குவதில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவைச் சேர்ந்த வீரந்தீப் சிங் ரூ. 30 லட்சம் அடிப்படை விலையில் பதிவு செய்துள்ளார். அணிகளின் இறுதி வீரர்கள் பட்டியல் டிசம்பர் 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது.