மூன்று முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 2026 சீசனுக்காக ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சனை புதிய உதவி பயிற்சியாளராக நியமித்துள்ளது. மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஐ.பி.எல். பயிற்சி பணிக்குத் திரும்பும் வாட்சன், இதற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இதே பொறுப்பை வகித்துள்ளார்.
வாட்சன், தலைமைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் இணைந்து செயல்படுவார். முன்னாள் வீரர் டுவைன் பிராவோ தொடர்ந்து அணியின் மெண்டராக பணியாற்றுவார்.
2025 சீசனில் எட்டாவது இடத்தை பிடித்த கே.கே.ஆர்., வாட்சனின் உலகத்தரம் வாய்ந்த டி20 அனுபவத்தின் மூலம் அணியின் செயல்பாட்டை மேம்படுத்தி மீண்டும் கோப்பையை வெல்லும் என்று நம்புகிறது.
கே.கே.ஆர். தலைமை செயல் அதிகாரி வெங்கடேஷ் மைசூர், வாட்சனின் நியமனம் அணிக்கு கூடுதல் மதிப்பை தரும் என்று மகிழ்ச்சி தெரிவித்தார். வாட்சனும், கே.கே.ஆர். அணியில் இணைவது ஒரு பெரிய கவுரவம் என்றும், அணிக்கு மேலும் ஒரு கோப்பையை பெற்றுத் தர ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.