சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடாது என்று பிசிசிஐ மற்றும் இந்திய அரசு அறிவித்ததை அடுத்து, பாகிஸ்தானுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. கராச்சி, லாகூர், ராவல்பிண்டி போன்ற மைதானங்களை சர்வதேச போட்டிக்கு தயார் செய்வதற்காக 347 கோடி ரூபாய் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலவு செய்தது. அது மட்டுமின்றி, மற்ற செலவுகள் சேர்த்து மேலும் 500 கோடிக்கு மேல் செலவு செய்ததாக தெரிகிறது.
ஆனால், பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமின்றி, சில போட்டிகள் மழை காரணமாக இரத்தானதால், போட்டியை காண ரசிகர்கள் மைதானத்திற்கு வர ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக, மிகப்பெரிய அளவில் வருமானம் குறைந்தது.
ஐசிசி வழங்கிய கட்டணம், டிக்கெட் வருமானம், விளம்பரத் தொகை ஆகியவற்றை கணக்கிட்ட போது, பாகிஸ்தானுக்கு கிடைத்தது வெறும் 52 கோடி ரூபாய் மட்டுமே. இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட முடியாது என்று கூறியதை அடுத்து, இந்திய போட்டிகள் துபாய் மைதானத்தில் நடத்தப்பட்டதால், பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.
துபாயில் நடந்த போட்டிகளின் வருமானம் பெரும்பாலும் இந்தியாவுக்கு கிடைத்தது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியதால், பாகிஸ்தான் ரசிகர்கள் இந்த தொடரைப் பார்க்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், மொத்தம் பாகிஸ்தானுக்கு இந்த தொடரை நடத்தியதன் காரணமாக 869 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், ஐசிசி தலைவர் ஜெய் ஷா இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாது என்று கூறியதே என கூறப்படுகிறது.