தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், எம்.ஜி.ஆரின் திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டி தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
'மர்மயோகி' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். பேசிய, "குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்" என்ற வசனத்தை விஜய் மேடையில் மேற்கோள் காட்டினார்.
"இந்த வசனத்தை நான் ஏன் பேசுகிறேன் என்பதை தேவைப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்கள். ஏன் விஜய்யை தொட்டோம்? விஜய் உடன் இருக்கும் மக்களை தொட்டோம் என நினைத்து வருந்துவார்கள்.
தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் இளம் தலைமுறையினரை தற்குறிகள் என்கிறார்கள். வாக்கு செலுத்திய மக்களையே தற்குறிகள் என்று அழைப்பதா? இதுதான் நீங்கள் மக்களுக்குக் காட்டும் நன்றியா?
இந்தத் தற்குறிகள்தான் உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்க போகிறார்கள். இவர்கள் தற்குறிகள் அல்ல, தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்திற்கான ஆச்சரியக்குறிகள்!" என்று சவால் விடுத்தார்.
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோதும் கூட, இதை 'கூத்தாடிக் கட்சி', 'நடிகர் கட்சி' என்று விமர்சித்தனர். விமர்சித்தவர்களே பின்னர் எம்.ஜி.ஆருடன் சேர்ந்துகொண்டனர். ஒட்டுமொத்த தமிழக மக்களும் எம்.ஜி.ஆருடனே நின்றனர். இது வரலாறு. இது நம்மைவிட அவர்களுக்கு நன்கு தெரியும். 54 ஆண்டுகளாக இதே கதறல்கள்தான். இனியும் கதறல்கள்தான்" என்று கூறி, தவெகவின் அரசியல் பயணம் தொடரும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.