ரஜினி கமல் ஆகியோருக்கே அரசியல் செட் ஆகாத நிலையில் திடீரென விஜய் அரசியல் கட்சி துவங்கி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பினார். விஜய்க்கென பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. ஆனால் அது எல்லாம் ஓட்டாக மாறாது என்று விஜயை பிடிக்காதவர்களும் ஆளும் கட்சியினரும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
விஜயால் அரசியல் கட்சியை நடத்த முடியாது என்ற பலரும் பேசினார்கள். ஆனால் தவெக ர்பில் இதுவரை இரண்டு பெரிய மாநாடுகளை நடத்தி விட்டனர். இந்த கூட்டங்களில் பல லட்சம் பேர் கலந்துகொண்டது பேசுபொருளாக மாறியது. அதேநேரம் விஜய் கரூருக்கு சென்றபோது ஏற்பட்ட அசம்பாவிதத்தால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கட்சியை முடக்கிப்போட்டது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுகவை தோற்கடிக்க வேண்டும் என விஜய் நினைக்கிறார்.
உண்மையில் அதுதான் விஜயின் விருப்பம் என்றால் அவர் அதிமுக- பாஜக கூட்டணியுடன் இணைய வேண்டும். அப்போதுதான் தவெக வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். திமுகவும் தோல்வியடையும். விஜய் தனித்து நின்றால் வாக்குகள் பிரிந்து திமுக வெற்றிபெறும் என பலரும் பேசி வருகிறார்கள். எங்களுடன் விஜய் சேர்வது விஜய்க்கும், அவரின் அரசியல் எதிர்காலத்திற்கும் நல்லது என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசினார்கள். ஆனால் விஜயோ தனித்து நிற்கும் எண்ணத்தில் இருந்தார்.
இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை விஜய் தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. எல்லாம் சரியாக அமைந்தால் அதிமுக - பாஜக கூட்டணியில் விஜயின் தவெக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.