புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பயின்று வரும் மாணவி ஒருவர், தனது பேராசிரியர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மூத்த மாணவிக்கு அனுப்பிய ஆடியோ, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களாக பேராசிரியர் தன்னை துன்புறுத்துவதாகவும், "நிர்வாணப் புகைப்படங்கள் அனுப்பு" என்று வெளிப்படையாக கேட்பதாகவும் அந்த மாணவி ஆடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், "புகைப்படங்கள் அனுப்பவில்லை என்றால் இண்டர்னல் மதிப்பெண்களில் கை வைத்து விடுவேன்; உன்னால் தேர்வு எழுத முடியாது" என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார். பட்டப்படிப்பை முடித்து டாக்டரேட் பட்டம் பெற வேண்டும் என்ற தனது கனவு சிதைவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தப் பேராசிரியரால் 30 முதல் 40 மாணவிகள் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த அநீதிக்குத் தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் பேட்டி அளித்ததுடன், மகளிர் காங்கிரஸ் அமைப்பினர் புதுச்சேரி மகளிர் ஆணையத்திலும், மாணவர் காங்கிரஸ் காரைக்கால் பல்கலைக்கழகத்திலும் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கமிட்டி அமைக்க கோரி, மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, போலீசார் மாணவர்களை லத்தியால் தாக்கியும், ஷூ கால்களால் உதைத்தும் சுமார் 25 மாணவர்களை கைது செய்துள்ளனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம் நிலவி வருகிறது.