சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளுக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் வாரக்கணக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சில பகுதிகளில் குப்பைகளை சுத்தம் செய்யும் ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு தூய்மை பணியாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர், மேலும் அரசு வாக்குறுதி அளித்தப்படி தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கையை முன்வைத்து சென்னை ரிப்பன் மாளிகை முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் போராட்டம் நடத்திய ஊழியர்களில் பலர் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் மீத பணியாளர்களும் பணிக்கு திரும்புவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா பேசியிருந்தார்.
ஆனால் அதை தூய்மைப் பணியாளர்கள் போராட்டக் குழு மறுத்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அவர்கள் “முந்தைய ஆட்சியில் தூய்மைப் பணியாளர்கள் தனியார்மயமானபோது ஸ்டாலினும், மா. சுப்பிரமணியனும் அதை எதிர்த்தனர். மேலும் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
ஆட்சி அமைப்பதற்கு முன் ஒரு பேச்சு, தற்போது ஒரு பேச்சா? போராட்டக் குழுவில் உள்ள சிலர் பணிக்கு திரும்பியதாக பொய் தகவல்களை கூறுகின்றனர். தனியார் நிறுவனங்களுக்கு ஏஜெண்யாக செயல்பட வேண்டும் என அரசு நினைத்தால் பதிலடி கொடுக்கப்படும்” என கூறியுள்ளனர்.
தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K