தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு தங்களது தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த தீவிரமாக இருந்து வரும் நிலையில், அதை ஏற்க தமிழக அரசு மறுத்து வருகிறது. அதை ஏற்காததால் தமிழக அரசுக்கு தர வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்காதது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கையை அமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், பொதுமக்கள், கல்வி நிபுணர்கள் என ஏராளமானவர்களுடன் கலந்து ஆலோசித்து கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர்.
தற்போது அதிலிருந்து மாநில கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்விக் கொள்கையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் “தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என இன்னொரு வாழும் பெரியாராக போர் முரசு கொட்டியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். மதம் பிடித்து தமிழ்நாட்டின் கல்வியை அழிக்க துடிப்பவர்களின் அங்குசம்தான் இந்த மாநில கல்வி கொள்கை” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K