உத்தரப் பிரதேசம் அயோத்தியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராமர் கோயிலின் கொடியேற்ற விழாவுக்கு தயாராகி வருகிறது. நவம்பர் 25 ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில், 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காவிக்கொடியை ஏற்றவுள்ளார்.
இந்த விழாவுக்காக, ராமர் கோயில் மற்றும் அயோத்தி நகரம் முழுவதும் சுமார் 100 டன் மலர்களை கொண்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. ராமர் விரும்பும் சாமந்தி பூக்கள் சிறப்பு அலங்காரத்தில் இடம் பிடித்துள்ளன.
கோபுரத்தில் ஏற்றப்படவுள்ள இந்தக் காவிக்கொடி 22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டது. இது 42 அடி உயர கம்பத்தில் 360 கோணத்தில் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கொடியில் சூரியன், 'ஓம்' போன்ற புனிதச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
விவாஹ பஞ்சமி தினத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு காலை 9 மணிக்கு மேல் தொடங்கி பிற்பகல் 2 மணியளவில் நிறைவடையும். பாதுகாப்பு காரணமாக அன்றைய தினம் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.