கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டை தொடக்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, தனது உரையில் "பிகாரில் வீசும் காற்று தமிழகத்திலும் வீசுகிறது" என்று கூறி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மாநாட்டுக்கு தாமதமாக வந்ததற்காக மன்னிப்புக் கோரிய பிரதமர், மேடையில் விவசாயிகள் துண்டுகளை சுழற்றியதை பார்த்தபோது, "பிகார் காற்று இங்கும் வீசுகிறதோ?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், மருதமலை முருகனை வணங்கி, கோவையை 'தொழில்முனைவு ஆற்றலின் சக்தி பீடம்' என்று பாராட்டினார். கோவையை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக இருப்பது பெருமை என்றும், கோவை ஜவுளித்துறை இந்திய பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுவதாகவும் மோடி குறிப்பிட்டார்.
மேலும் பி.ஆர். பாண்டியன் அவர்களின் உரை தமிழில் இருந்ததால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரது உரையை ஆங்கிலம், ஹிந்தியில் மொழிபெயர்த்து கொடுக்கும்படி ஆளுநர் ஆர். என். ரவியிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்றும் பிரதமர் மோடி பேசினார்.