மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க. போராட்டம் நடத்துவது குறித்து அதிர்ச்சி தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை 1952 ஆம் ஆண்டு முதல் 13 முறை நடத்தப்பட்டுள்ளது என்றும், இது இந்திய அரசியலமைப்பில் உள்ள கட்டாய நடைமுறை என்றும் அவர் விளக்கினார். இது வாக்காளர்களின் உரிமையை பறிக்கும் செயல் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை, "புரியாமல் பேசுகிறார்" என்று நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.
தி.மு.க.வின் உண்மையான நோக்கம் தங்கள் தவறுகளை மறைப்பதுதான் என்று அவர் குற்றம் சாட்டினார். ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த முறைகேடுகளை வைத்துக்கொண்டுதான் தி.மு.க. வெற்றி பெற்றதா என்றும் கேள்வி எழுப்பினார்.
வாக்குரிமை யாருக்கும் பறிபோகாது என்றும், மாற்று ஆவணங்களுக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், பி.எல்.ஓ.க்கள் வீட்டிற்கே வருவார்கள் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். அரசியலமைப்பின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.