திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காதல் ஜோடி ஒன்றுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பே மணமக்களை பெற்றோர் கடத்த முயன்றதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த திருமணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சஞ்சய் குமார் மற்றும் அமிர்தா ஆகியோர் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சஞ்சய் குமாரை அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல முயன்றதாக தெரிகிறது.
பெற்றோரிடமிருந்து தப்பி வந்த சஞ்சய் குமார், தனது காதலி அமிர்தாவை எட்டுக்குடி முருகன் கோவிலில் திருமணம் செய்ய முதலில் திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. இதனை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சஞ்சய் குமார் மற்றும் அமிர்தாவின் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
சில நாட்களுக்கு முன்புதான், தங்களது கட்சி அலுவலகத்தில் திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில், இதுபோன்ற ஒரு திருமணம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.