மதுரை மாவட்டம் மேலூரில், காதல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர், தனது மனைவி கண்முன்னே கார் மோதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலூரைச் சேர்ந்த 22 வயது சதீஷ், 27 வயதான ராகவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராகவிக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், இந்த காதலுக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டியதால், சதீஷ் மற்றும் ராகவி இருவரும் திருச்சியில் குடியேறினர்.
இதற்கிடையில், ராகவியின் தந்தை அழகர், மேலூர் காவல் நிலையத்தில் தன் மகளை காணவில்லை என புகார் அளித்தார். இதையடுத்து, ராகவி வீட்டிற்கு திரும்பினார். ஆனால், அவரை சதீஷை சந்திக்க அவரது குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை.
அதேபோல் சதீஷ் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை எனப் புகார் அளித்தார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தபோது, இருவரும் வயது வந்தவர்கள் என்பதால், அவர்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என ராகவியின் பெற்றோரை காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். ராகவியின் இரண்டு குழந்தைகளும் அவரது பெற்றோருடன் தங்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சதீஷ் மற்றும் ராகவி இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, ஒரு கார் அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் ராகவி மீட்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சதீஷின் பெற்றோர்கள், இது ஒரு விபத்து அல்ல, ராகவியின் குடும்பத்தினரின் சதி என குற்றம்சாட்டி, கொட்டம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது.