திமுக எம்பியும் அமைச்சர் துரைமுருகன் மகனுமான கதிர் ஆனந்த் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அவருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடந்தது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கல்லூரியில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கதிர் ஆனந்திற்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 7 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். 24 மணி நேரத்தை கடந்து இன்று இரண்டாவது நாளாகும் சோதனை நடைபெற்று வருவதாகவும் சுமார் 18 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
நேற்று இரவு லாக்கரிலிருந்து ஆவணங்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படாத நிலையில் ரொக்க பணம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இந்த பணத்தை எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் மூலம் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் கல்லூரியின் சில ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்று இரவுக்குள் இந்த சோதனை முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.