காட்பாடியில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வரும் நிலையில் சோதனை செய்யும் அதிகாரிகளுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் சிக்கிய விவகாரம் குறித்து கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காட்பாடி காந்திநகரில் உள்ள கதிர் ஆனந்த் எம்பி வீட்டில் இல்லத்தில் சோதனை நடந்து வருகிறது என கூறப்படுகிறது.
இதே காந்திநகர் இல்லத்தில் அமைச்சர் துரைமுருகனும் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காட்பாடியில் உள்ள திமுக நிர்வாகி சீனிவாசன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது வேலூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட நிலையில் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.