அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் மௌனமாக இருக்கும் திமுக எம்பி கனிமொழி எங்கே? என பாஜகவின் குஷ்பு கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் எந்த மாநிலத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் அது பாதிப்பு தான் என்றும், பெண்கள் பாதிக்கப்பட்டால் கட்சி ரீதியாக சாயம் பூச வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்களை வெளியிட்டவர்களுக்கு தான் தண்டனையை வாங்கி தர வேண்டும் என்றும், நான் மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்தபோது தமிழகத்தில் இருந்து தான் அதிகமான புகார்கள் பெண்களுக்கு எதிராக வந்தது என்றும் அவர் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் திமுகவிலிருந்து யாரும் குரல் கொடுக்கவில்லை என்றும், குறிப்பாக கனிமொழி எங்கே? அவரது மகளிர் அணி எங்கே போனது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திமுக சார்பில் ஒரு பெண் அமைச்சர், எம்பி அல்லது எம்எல்ஏ கூட ஏன் குரல் கொடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு தமிழகம் வந்த போது, தமிழக மகளிர் ஆணையத்தின் சார்பில் யாரும் உடன் செல்லாதது ஏன்? என்றும் குஷ்பு கேள்வி எழுப்பினார்.