Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்புக்கு தண்டனை அறிவிக்கப்பட உள்ளது - என்ன விவகாரம்?

அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்புக்கு தண்டனை அறிவிக்கப்பட உள்ளது - என்ன விவகாரம்?

Prasanth Karthick

, சனி, 4 ஜனவரி 2025 (14:43 IST)

தன்னைப் பற்றிய தகவல்களை வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருப்பதற்காக பணம் கொடுத்த விவகாரத்தில் (hush money), டொனால்ட் டிரம்புக்கு நியூயார்க்கில் வரும் ஜனவரி 10-ஆம் தேதி அன்று தண்டனை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது.

 

 

"டிரம்புக்கு சிறைத்தண்டனை, அபராதம் போன்ற எதுவும் விதிக்கப்படாது, மாறாக இதற்கு 'சரியான தீர்வு கண்டு வழங்கப்படும்'. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் இந்த விசாரணைக்கு நேரிலோ அல்லது காணொளி வாயிலாகவோ கலந்து கொள்ளலாம்", என்று நியூயார்க் நீதிமன்றத்தின் நீதிபதி ஜுவான் மெர்ச்சன் உத்தரவிட்டார்.

 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைப் பயன்படுத்தி, டிரம்ப் தனக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முயன்றார்.

 

தண்டனை விதிக்கப்போவதாக உள்ள நீதிபதியின் முடிவை டிரம்புக்கு ஆதரவான குழு விமர்சித்தது. மேலும் 'சட்டத்தின் வழி செயல்படுத்தப்படாத இந்த வழக்கை உடனடியாக தள்ளுபடி' செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

 

ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என 2024 ஆம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.

 

2016-ஆம் ஆண்டு, அதிபர் தேர்தல் பிரசாரத்தின் இறுதி கட்டத்தில் டிரம்புடனான தன்னுடைய பாலியல் உறவு பற்றி வெளியே பேசாமல் இருக்க நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் பணம் கொடுத்தார். இதனை மறைப்பதற்கான முயற்சிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இதில் இடம்பெற்றன.

 

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் டிரம்ப் மறுத்துள்ளார். தான் குற்றமற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு அவரது 2024 அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சியாக இருப்பதாகவும் அவர் வாதிட்டார்.

 

வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) அன்று டிரம்பின் செய்தித் தொடர்பாளர், நீதிபதி மெர்சனின் உத்தரவை விமர்சித்தார். இது 'சதி திட்டத்தின் ஒரு பகுதி' என்று அவர் குறிப்பிட்டார்.

 

"ஆட்சி மாற்ற செயல்முறையைத் தொடரவும், அதிபருக்கான முக்கிய கடமைகளை நிறைவேற்றவும் டிரம்ப் அனுமதிக்கப்பட வேண்டும்", என்று ஸ்டீவன் சியுங் கூறினார்.

 

"டிரம்புக்கு எந்த ஒரு தண்டனையும் இருக்கக்கூடாது. தனக்கு எதிரான இந்த பொய் பரப்புரைகளை முடிவுக்கு வரும் வரை டிரம்ப் அதனை எதிர்த்து தொடர்ந்து போராடுவார்" என அவர் கூறினார்

 

இந்த வழக்கு, தான் அதிபராக இருக்கும்போது ஆட்சி அதிகாரத்தை செயல்படுத்த தடையாக இருக்கும் என்று அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், தனது சமீபத்திய வாதத்தில் தெரிவித்திருந்தார்.

 

அதிபராக பணியாற்றும்போது ஒரு கிரிமினல் வழக்கால் திசை திருப்பப்படுவதை பற்றிய டிரம்பின் கவலைகளை குறைக்கும் விதமாக, தான் என்னென்ன நடவடிக்கைகளை(தண்டனை) எடுக்கலாம் என தனக்கு அறிவுரை வழங்கப்பட்டதாக நீதிபதி மெர்ச்சன் கூறினார்.

 

ஆனால், நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்வது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

 

78 வயதான டிரம்ப் 2029-ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் வரை தண்டனையை தாமதப்படுத்துவது அல்லது சிறைத் தண்டனை இல்லாமல் வேறொரு தீர்ப்பை அளிப்பது போன்ற போன்றவற்றை நீதிபதியிடம் உள்ள வாய்ப்புகள் ஆகும்

 

ஆரம்பத்தில் டிரம்ப் தனது வாதத்தில் தோல்வியுற்றார். தனக்கு எதிரான இந்த வழக்கு அதிபர் பதவி வகிப்பவருக்கு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள விதிவிலக்குகளுக்கு எதிரானது என அவர் வாதிட்டார்.

 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிபர் ஒருவர் பதவியில் இருக்கும்போது, அவர் எடுக்கும் 'அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு' குற்றவியல் வழக்குகளில் இருந்து விலக்கு இருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இருப்பினும், டிரம்பின் hush money விவகாரம் குறித்த தண்டனை செல்லுபடியாகும் என்று கடந்த மாதம் நீதிபதி மெர்ச்சன் தீர்ப்பளித்தார்.

 

தற்போது வெள்ளை மாளிகையில் பணியாற்றவுள்ள முதல் தண்டனை பெற்ற குற்றவாளி டிரம்ப் ஆவார்.

 

தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்ய முயற்சி செய்யலாம்.

 

வணிக கணக்குகளில் பொய் கணக்கு எழுதினால் அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆனால் இது போன்ற வழக்கில் குறைந்தபட்ச தண்டனை என்று எதுவும் இல்லை மற்றும் சிறைத்தண்டனை தேவையில்லை.

 

2024 அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, டிரம்பின் வயது மற்றும் சட்ட ஆவணங்களின் பின்னணியை கருத்தில் கொண்டு, அவர் சிறைத் தண்டனை அனுபவிப்பது சாத்தியமில்லை என்று சட்ட வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.

 

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு ஆரம்பத்தில் நவம்பர் 26-ஆம் தேதி அன்று தண்டனை அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நீதிபதி மெர்ச்சன் இந்த தண்டனை அறிவிக்கும் தேதியை ஒத்தி வைத்தார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஜனவரி 10 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!