தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை விடுபட்ட தகுதியான பெண்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இன்று ராணிப்பேட்டையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் இதை உறுதி செய்தார். தற்போது தமிழகத்தில் 1 கோடியே 20 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். விடுபட்டவர்களுக்கான சேர்க்கை டிசம்பரில் தொடங்கும்.
இந்த விழாவில், ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் காமராஜர் நினைவு இல்லம் மற்றும் இறகு பந்து உள்விளையாட்டரங்கம் ஆகியவற்றை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், 72,880 பயனாளிகளுக்கு ரூ.296.46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், ரூ.68.7 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர். காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.