தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை (மாதம் ரூ. 1,000) திட்டத்தில், புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியானவர்களுக்கு நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
2023 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், கடுமையான கட்டுப்பாடுகளால் சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனடைந்து வந்தனர். உரிமை தொகை கிடைக்காத குடும்பங்களின் அதிருப்தியை குறைக்கும் நோக்கில், அரசு தற்போது பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாக புதிதாக சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பதாரர்களில், வருமான வரி செலுத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்களை தவிர்த்து மற்ற தகுதியுள்ள பெண்களுக்கு உரிமை தொகை வழங்க நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தபடி, இந்த புதிய பயனாளிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் உரிமைத் தொகை விடுவிக்கப்பட உள்ளது. இதன் மூலம், திட்டத்தின் பலன்களை அதிக குடும்பங்களுக்கு கொண்டு சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.