நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஒரு மாணவி தமிழக ஆளுநரிடம் இருந்து பட்டம் வாங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், துணைவேந்தரிடம் சென்று தனது பட்டத்தை பெற்றுக்கொண்டார். பின்னர், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "ஆளுநர் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுவதால், அவர் கையால் பட்டம் வாங்க விரும்பவில்லை" என்று அந்த மாணவி கூறினார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளான நிலையில், அந்த மாணவி நாகர்கோவில் மாநகர திமுக துணை செயலாளர் ஒருவரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் வெளியான பிறகு, இந்த சம்பவம் திட்டமிட்ட அரசியல் செயல்பாடு என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் குறித்து தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, "கட்சியில் பெயர் வாங்குவதற்காக திமுகவினர் இதுபோன்ற தரங்கெட்ட நாடகங்களுக்கு கல்வி நிலையங்களை பயன்படுத்துகின்றனர்" என்று குற்றம் சாட்டினார். இது ஒரு விளம்பர ஸ்டண்ட் என்றும், அரசியல் ஆதாயத்துக்காக நடத்தப்பட்ட நாடகம் என்றும் நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.