பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மை பணியாளர்களை, காவல்துறை இன்று கைது செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என்று கூறி, பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்ததையடுத்து, பணியாளர்களை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டது. கைது செய்யப்பட்டவர்கள் அருகிலுள்ள சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.