தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளால் (SIR) ஏழை எளியோர் மற்றும் கிராமப்புற மக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் முறைகேடு நடப்பதைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அவர் பேசியுள்ளார்.
டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் படிவங்களை சமர்ப்பிக்கும் இந்த நெருக்கடி நிறைந்த எஸ்.ஐ.ஆர். பணிகளின் போது, வேலைக்கு சென்றிருப்பதால் வீட்டில் இல்லாதவர்கள் தங்கள் வாக்காளர் உரிமையை பறிகொடுக்க நேரிடும் என்று முதல்வர் கவலை தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர். பணிகளை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், கூட்டணியின் சார்பில் நவம்பர் 11-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் வாக்கு திருட்டு நடைபெறாமல் தடுக்க, திமுக தொண்டர்கள் மற்றும் பூத் ஏஜென்ட்கள் ஜனநாயகத்தின் காவலர்களாக இருந்து வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.