தமிழ்நாடு அரசால் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ. 10,740 கோடி மதிப்பீட்டில் கோவையிலும், ரூ. 11,368 கோடி மதிப்பீட்டில் மதுரையிலும் திட்டங்கள் அனுப்பப்பட்ட நிலையில், இத்திட்டங்களுக்கு, போதிய மக்கள்தொகை இந்த இரு நகரங்களிலும் இல்லாததே நிராகரிப்புக்கு காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி வழங்க நகரின் மக்கள்தொகை குறைந்தபட்சம் 20 லட்சம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், கோவை மற்றும் மதுரையில் சுமார் 15 லட்சம் மக்கள்தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவில் முரண்பாடு உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏனெனில், மக்கள்தொகை குறைவாகவுள்ள ஆக்ரா, நாக்பூர், புனே போன்ற நகரங்களில் ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிராகரிப்பு, தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய நகரங்களின் பொது போக்குவரத்து மேம்பாட்டு முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.