தூய்மைப் பணியை தனியார்மயப்படுத்தும் தமிழக அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும் என மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்க கூடிய தமிழக அரசின் முடிவு, அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம். தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இது நகரங்களின் தூய்மையையும், வசிக்கும் மக்களின் சுகாதாரத்தையும் பாழாக்கும்.
கூடுதலான பிரச்னை என்றால், மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணி ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறை தீர்மானிக்கிறது, மாநகராட்சி நிர்வாகம் அல்ல. இயல்பாக ஒரு பிரச்னை என்ன வருகிறது என்றால், இந்த ஒப்பந்தத்தை எடுக்கக் கூடிய எந்த நிறுவனமும், அந்த மாநகராட்சிகளின் அதிகாரிகளின் சொல்வதைக் கேட்பதில்லை. அவர்களது குரலுக்கும் செவி சாய்ப்பதில்லை. தன்னிச்சையாக செயல்படுகிறது. இந்த அவலம் தீர்க்கப்பட வேண்டும். இதற்கு அடிப்படைக் காரணமான தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கும் அரசின் அடிப்படைக் கொள்கை முடிவை கைவிட வேண்டும்.
மதுரை மாநகராட்சியைப் பற்றி கடந்த 4 நாள்களாக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிற செய்திகளும், ஒட்டப்பட்டுள்ள போஸ்டரும் மிகவும் வேதனையானது. "அசுத்தமான நகரங்களின் பட்டியலில் மதுரை முதலாவது இடம்" என்ற செய்தியை வெளியிட்டது யார்? எந்த நிறுவனம் வெளியிட்டது, எந்த அமைப்பு வெளியிட்டது எனச் சோதிக்காமல், உண்மைத் தன்மையை ஆராயாமல் நாம் பெரிதும் மதிக்கக்கூடிய சில அச்சு ஊடகங்கள் கூட வெளியிட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை 20 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் வசிக்கும் தூய்மை நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. அதில், 40-ஆவது இடத்தில் மதுரை மாநகராட்சி இடம் பெற்றிருந்தது. இந்தப் பட்டியலில் முதலிடம் பெற்ற மாநகராட்சிக்குக் குடியரசுத் தலைவர் விருது வழங்கினார். அதனையொட்டி தான் அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனையொட்டி நான் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். அந்தப் பட்டியல் வெளியிடப்பட்ட குறியீடுகளில் பிரச்னை இருக்கிறது. ஆனால், 40 ஆவது இடம் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாதது. மதுரை மாநகரத்தின் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். இந்த அறிக்கைக்காக, மாமன்றக் கூட்டத்தில் கூட திமுக உறுப்பினர்களே எனக்கு எதிராகப் பேசினார்கள். இது நடந்து முடிந்து 4 மாதங்கள் கடந்துவிட்டது.
தற்போது, அந்த 40 நகரங்கள் பட்டியலில் கடைசி 10 நகரங்களின் பட்டியலை எடுத்து அதை அப்படியே தலைகீழாக மாற்றி "அசுத்தமான நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடம்" என்ற ஒரு செய்தியை பாஜகவைச் சேர்ந்தவர்கள் அதனைப் பரப்பினார்கள். அதுதான் உண்மை. ஆனால் அதனை யாருமே விசாரிக்காமல் எல்லா ஊடகங்களும் வெளியிட்டது மிகவும் வேதனையாக இருக்கிறது.
தூய்மைப் பணியை தனியார்மயப்படுத்தும் தமிழக அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும். அது நடக்காதவரை நகரங்களின் நல்வாழ்வும், மக்களின் சுகாதாரமும் கேள்விக்குள்ளாவது தவிர்க்க முடியாது. அதாவது, மதுரை நகரத்தின் குப்பைகள் எப்படி அகற்றப்பட வேண்டுமோ? அதேப் போல இதுபோன்ற பொய்களைப் பரப்புகிற அரசியலின் குப்பைகளும் அகற்றப்பட வேண்டும்
இவ்வாறு சு.வெங்கடேசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.