சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது என்றும், தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் குழாய் மூலம் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடையாறு, திருவான்மியூர், சேப்பாக்கம், ராயபுரம், பாரிமுனை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வீடுகளுக்கு வழங்கும் திட்டம் முதலில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதன் பிறகு மற்ற பகுதிகளுக்கு படிப்படியாக இத்திட்டம் விரிவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்காக 466 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் அமைக்கப்படும் எனவும், ரூபாய் 48 கோடி மதிப்பிலான இக்குழாய் எரிவாயு திட்டத்தை, 'டோரான்ஸ் கேஸ்' என்ற நிறுவனம் செயல்படுத்த உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.