நேற்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸை எதிர்கொண்டு வெற்றிபெற்ற மும்பை அணி கடைசி நேரத்தில் பார்த்த ஒரு வேலைதான் தற்போது பேச்சாகியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியை 162 ரன்களில் கட்டுப்படுத்திய மும்பை இந்தியன்ஸ், சேஸிங்கில் 18 ஓவரில் 166 ரன்களை குவித்து 4 விக்கெட்டுகள் 11 பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆனால் கடைசி ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற இடத்தில் 16 வது ஓவரில் இருந்து மும்பை அணி ரன் கூட ஓடாமல் நின்று கொண்டே இருந்தனர். பந்துகள்தான் இருக்கிறதே, பவுண்டரியோ சிக்ஸரோ அடித்து முடிக்கலாம் என அவர்கள் காத்திருப்பதாக தெரிந்தது. அதேபோல 18.1வது பந்தில் ஒரு பவுண்டரியை அடித்து 166 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே ரசிகர்களின் கணக்கு வேறாக இருந்தது. அதாவது தற்போது சென்னை அணிதான் புள்ளிப்பட்டியலில் கடைசி 10வது இடத்தில் கிடக்கிறது. அதற்கு மேல் சன்ரைசர்ஸ், மும்பை, ராஜஸ்தான் அணிகள் இருந்தன. நேற்றைய போட்டியில் மும்பை அணி தோற்றால் ரன் ரேட் விகிதத்தில் கீழே வந்துவிடும், சிஎஸ்கே மேலே 9வது இடத்திற்கு சென்று விடும் அல்லது மும்பை வென்றாலும் 10வது இடத்திற்கு சன்ரைஸர்ஸ் சென்றுவிடும், எப்படி பார்த்தாலும் சிஎஸ்கே 10வது இடத்திலிருந்து மேலே வந்துவிடும் என கணக்கு போட்டார்கள். ஏனென்றால் ஐபிஎல் சீசன்களில் இதுவரை கடைசி இடத்தில் சீசனை முடிக்காத ஒரே அணி சிஎஸ்கே என்பதால்.
நேற்று மும்பை அந்த ஒரு ரன்னை 16வது ஓவரிலேயே முடித்திருந்தால் சிஎஸ்கே ரசிகர்கள் போட்ட கணக்கு செல்லுபடியாயிருக்கும். ஆனால் சிஎஸ்கேவை மேலே ஏற விடக்கூடாது என்பது போல கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை அணி உருட்டி விளையாடி வென்றதால் சன்ரைசர்ஸின் NRR சற்றே குறைந்து 9வது இடத்தில் நீடிப்பதால், சிஎஸ்கே 10வது இடத்தில் அப்படியே இருக்கிறது.
அதை குறிப்பிட்டு பதிவிட்டு வரும் சிஎஸ்கே ரசிகர்கள் “நாங்கள் மேலே வரக்கூடாது என வேண்டுமென்றே மும்பை இந்தியன்ஸ் இப்படி செய்திருக்கிறது. இதற்கு ஞாயிற்றுக்கிழமை பதிலடி கிடைக்கும்” என மார்த்தட்டி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையெயான Revenge Week நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K