பெண்களை குறைத்து பேசிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரு பொதுவெளிக் கருத்தரங்கில், பெண்கள், சைவம் மற்றும் வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தார். இது சமூகவலைதளங்களில் பெரும் விமர்சனங்களை கிளப்ப, அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் தனது துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு எதிரான வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி, பொன்முடியின் சர்ச்சைக்குரிய உரையை நேரில் காண்பித்து, "அவர் பேசியதை ஆதாரமாக 5 புகார்கள் உள்ளது. அந்த உரையின் வீடியோவும் தரவாக உள்ளது. வழக்குப் பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும், “பொன்முடி பேசியதை வேறு யாராவது பேசியிருந்தால் இதுவரை ஏராளமான வழக்குகள் பதியப்பட்டிருக்கும். யாரும் சட்டத்திற்கு மேலல்ல,” என்று கூறி, தமிழக டிஜிபி இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.