கரூர், வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில், அரசு பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவில் நிலத்தில் வசிப்பவர்களை வெளியேற்றி, நிலத்தை மீட்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது. இதன்படி, நேற்று அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்க சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குடியிருப்புவாசிகளுக்கு ஆதரவாக ஜோதிமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட அனைத்து கட்சிப் பிரமுகர்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் தொடர்ந்ததால், அதிகாரிகள் இவர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர். அரசு பணிகளைச் செய்ய விடாமல் தடுத்ததாக வாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், இரு தலைவர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.