பெங்களூருவில் பட்டப்பகலில், மத்திய அரசு வரித்துறை அதிகாரிகள் போல வேடமிட்டு, ரூ. 7 கோடி பணத்துடன் சென்ற ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் நிறுவன வாகனத்தை கொள்ளையடித்த வழக்கில், காவல்துறைக்கு முக்கியமான துப்புகள் கிடைத்துள்ளன.
ஜே.பி.நகர் எச்.டி.எஃப்.சி வங்கியில் இருந்து ஏற்றப்பட்ட ரூ. 7 கோடி பணம், ஜெயநகர் அசோகா பில்லர் அருகே இன்னோவா கார் மூலம் மறிக்கப்பட்டது. கொள்ளையர்கள் தங்களை 'வரித்துறை அதிகாரிகள்' என்று அறிமுகப்படுத்தி, சி.எம்.எஸ். ஊழியர்களை அச்சுறுத்தி, பணப்பெட்டிகளை தங்கள் காருக்கு மாற்றி, டெய்ரி சர்க்கிள் மேம்பாலத்தில் அவர்களை இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், கொள்ளை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே குற்றவாளிகள் டெய்ரி சர்க்கிள் பகுதியில் நோட்டமிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் பெங்களூரு முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்ததில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவரின் புகைப்படத்துடன் கொள்ளையர்களில் ஒருவரின் முகம் ஒத்து போயுள்ளது.
இந்த கும்பல் முந்தைய ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
தற்போது தென் பெங்களூரு முழுவதும் சோதனைச்சாவடிகள் பலப்படுத்தப்பட்டு, தப்பிச் சென்ற சாம்பல் நிற இன்னோவா கார் மற்றும் குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சி.எம்.எஸ். ஊழியர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.