பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், செம்பியம் காவல்துறை 27 பேரை கைது செய்தது. இதில், அரசியல் தொடர்பு இருக்கலாம் என ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில், வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தனர். மேலும், "ஒவ்வொரு வழக்கையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோருவதை ஏற்க முடியாது" என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.