இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக, அவரது மனைவி ஹசின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தனக்கும் தனது மகளுக்கும் வழங்கப்படும் மாத ஜீவனாம்ச தொகையை அதிகரிக்கக் கோரியுள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.1.5 லட்சம் மற்றும் மகளுக்கு ரூ.2.5 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் ஒவ்வொரு மாதமும் வழங்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற அமர்வு, "மாதத்திற்கு ரூ.4 லட்சம் என்பது அதிக தொகையாக இல்லையா?" என்று கருத்து தெரிவித்தது. இருப்பினும், ஷமி மற்றும் மேற்கு வங்க அரசிடம் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹசின் ஜஹானின் வழக்கறிஞர், முகமது ஷமியின் வருமானம் மற்றும் சொத்துக்கள் தற்போது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட பல மடங்கு அதிகம் என்று வாதிட்டார். "ஷமிக்கு நூற்றுக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள சொத்துக்கள், சொகுசு கார்கள் உள்ளன, மேலும் அவர் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறார்," என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஷமியின் மகள் தனது தந்தையின் வாழ்க்கை தரத்திற்கு ஏற்ப படிக்கவும், கண்ணியத்துடன் வாழவும் உரிமை உண்டு என்று மனுவில் ஹசின் ஜஹான் குறிப்பிட்டுள்ளார்.
ஷமி மற்றும் மேற்கு வங்க அரசின் பதிலுக்கு பிறகு, இந்த வழக்கு டிசம்பர் மாதம் மீண்டும் விசாரணைக்கு வரும்.