தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தனது கட்சி கூட்டங்களை நடத்த தமிழக அரசு தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருவதாக அந்த கட்சியினர் புகார் தெரிவித்து வரும் நிலையில், கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் தமிழக அரசின் தடைகளை அவர் சந்தித்துதான் ஆக வேண்டும் என்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்று அந்த கட்சியினர் புகார் கூறுகின்றனர். கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் தமிழக அரசின் தடைகளை விஜய் எதிர்கொள்ளதான் வேண்டும். பாஜக உட்பட எந்த கட்சி நிகழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு எளிதில் அனுமதி அளிப்பதில்லை. நாங்கள் பலமுறை போராடிதான் அனுமதியை பெற்றுள்ளோம். விஜய் அவர்களும் அதுபோன்ற தடைகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “பொதுச் சொத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த விதமான தீங்கும் விளைவிக்காத வகையில் விஜய் தனது கூட்டங்களை நடத்த வேண்டும். அதுவே ஜனநாயகத்தின் அடிப்படை" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.