விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை முயற்சியில் மனித வடிவ ரோபோ விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெறும் தேசிய கண்டுபிடிப்பாளர் மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது “இஸ்ரோ ககன்யான் திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இஸ்ரோ உலக அளவில் விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் 9 இடங்களில் முதலிடத்தில் இருக்கிறோம். நிலவில் இருக்கக்கூடிய கேமராக்களில் மிகச்சிறந்த கேமரா நமது நாட்டின் கேமராதான்.
ககன்யான் திட்டத்தில் 2027ம் ஆண்டு மார்ச் மாதம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளோம். அதற்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் ஆளில்லா ராக்கெட் விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது. இதில் முதல்முறையாக மனித வடிவிலான வயோமித்ரா ரோபோட்டை விண்வெளிக்கு அனுப்ப உள்ளோம். இந்த திட்டத்தில் இஸ்ரோ மட்டுமல்லாமல் ஏரோ, நேவியும் பங்கேற்கிறார்கள்.
ஏஐ தொழில்நுட்பம் எல்லா துறைக்குள்ளும் வந்துவிட்டது. நாம் அனுப்ப உள்ள வயோமித்ரா கூட ஒரு ஏஐ ரோபோட்தான். சந்திரயான் 4 திட்டத்திலும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K