புனேயில், திருஷ்யம் படம் போல, தனது மனைவியை கொலை செய்து, சடலத்தை எரித்துவிட்டு நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். மோகன்லால் நடித்த 'திருஷ்யம்' திரைப்படத்தை குறைந்தது நான்கு முறை பார்த்து இந்த கொலையைச் செய்ததாக குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளார்.
புனேவின் ஷிவானே பகுதியை சேர்ந்த சமீர் ஜாதவ் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியை அஞ்சலி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீர் ஜாதவ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், மனைவியை கொல்ல திட்டமிட்டார்.
அக்டோபர் 26 அன்று, அஞ்சலியை ஒரு கிடங்கிற்கு அழைத்து சென்ற சமீர், அங்கு கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர் சடலத்தை எரித்து, சாம்பலை அருகிலிருந்த ஆற்றில் வீசினார்.
கொலைக்கு பிறகு, அஞ்சலியின் போன் மூலம் அவரது நண்பருக்கு 'ஐ லவ் யூ' என்று குறுஞ்செய்தி அனுப்பி, பதிலையும் தானே அளித்து, அஞ்சலி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக போலி ஆதாரங்களை உருவாக்கினார். மேலும், அவர் காணாமல் போனதாக புகாரளித்து, காவல்துறையினரிடம் மீண்டும் மீண்டும் சென்று, கொலையாளியை கண்டுபிடிக்குமாறு நாடகமாடியுள்ளார்.
எனினும், சமீரின் தொடர்ச்சியான கேள்வி கேட்பும், சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. தீவிர விசாரணைக்குப் பிறகு, சமீர் ஜாதவ் குற்றத்தை ஒப்புக்கொண்டு, 'திருஷ்யம்' படத்தின் உத்வேகத்தில் இந்த கொலையைச் செய்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து ராஜ்காட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.