கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தனது மனைவி மற்றும் அவரது தோழி ஆகியோர் சேர்ந்து ஐந்து மாத ஆண் குழந்தையை கொலை செய்ததாகக் கணவர் புகார் அளித்ததையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி சின்னட்டி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ் மற்றும் அவரது மனைவி பாரதி தம்பதிக்கு ஏற்கனவே 4 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
நவம்பர் 5 அன்று, பால் குடிக்கும்போது குழந்தை மயக்கமடைந்துவிட்டதாக கூறி, கேளமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, குழந்தை அடக்கம் செய்யப்பட்டது.
தனது மகன் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டதாக சந்தேகித்த சுரேஷ், மனைவி பாரதியின் செல்போனை சோதித்தார். அதில், பாரதிக்கும் அவரது தோழி சுமித்ராவுக்கும் இடையிலான புகைப்படங்கள் மற்றும் குரல் செய்திகளை கண்டுபிடித்தார். மேலும், குழந்தையை கொன்றதை பாரதி ஒப்புக்கொண்டதாக ஒரு பேச்சுக் குரல் பதிவையும் அவர் கண்டுபிடித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக பாரதிக்கும் சுமித்ராவுக்கும் இடையே லெஸ்பியன் தொடர்பு இருந்துள்ளதாகவும், 3வது குழந்தை பிறந்த பிறகு இருவராலும் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்ற மன உளைச்சலில், இந்த கொடூர செயலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுரேஷின் புகாரின் பேரில், கேளமங்கலம் போலீசார் பாரதி மற்றும் சுமித்ரா ஆகிய இருவரையும் கைது செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.